...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
“(நமதூர்) சுற்றுச்சூழலை பாதுகாப்போம்”
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்றார்கள் இறைதூதர் முஹம்மது நபி(ஸல்). வருங்கால சந்ததியினருக்காக இறைவன் அருளிய வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தி விட்டு செல்லுதலே நம் கடமை ஆகும். இன்றைக்கு நீர், நிலம் மற்றும் காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் காரணிகளை கண்டறிந்து அதனை குறைப்பதற்கு உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் நீர், நிலத்திற்கு கேடு விளைவிக்கும் பலவற்றில் முக்கியமான ஒன்று நெகிழி எனும் பிளாஸ்டிக் (Plastic).
“பிளாஸ்டிக் தவிர்ப்போம்” :
நீர்,நிலத்தை பாழ்படுத்துவதில் முதன்மையாக இருக்கும் பிளாஸ்டிக். மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கைப்பைகள் வரை நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளம். அனைத்தையும் தவிர்க்க முடியாவிட்டாலும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத குறிப்பாக மெல்லிய அளவிலான ஒருமுறை பயன்படுத்தும் (Use & Throw) வகையிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப் மற்றும் டம்ளர் உள்ளிட்டவைகளை தவிர்த்திட விட வேண்டும்.
பிளாஸ்டிக் உருவாக்கம் :
இவ்வகையிலான பிளாஸ்டிக் பொருட்கள் பாலிஎத்திலீன் (Polyethylene) ,பாலிபுரப்பிலீன் (Polypropylene) உள்ளிட்ட வேதியியல் பொருட்களிலிருந்து உயர் வெப்ப நிலையில் தயாரிக்கப்படுகின்றன குறைந்த மைக்ரான் அளவில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்கா தன்மை கொண்டவை. நிலத்திலும் நீரிலும் பல நூறு ஆண்டுகள் மக்காமல் மாசுபடுத்திக் கொண்டே இருப்பவை.
நீரோட்டத்தை தடுக்கும் பிளாஸ்டிக் :
மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் குழாய்களில் நம்மால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பை ஏற்படுத்தி பல நேரங்களில் சிரமங்களை ஏற்படுத்தும். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று சேரும் பிளாஸ்டிக் பொருட்கள் அங்கு வாழும் பல்வேறு உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
மனித உடலுக்கு ஏற்படும் தீங்கு :
இது தவிர நம்மில் பலரும் சூடான பொருட்களை இவ்வகையிலான பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்கின்றனர். வெப்பத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்ட இவை சூடான நிலையில் உணவுப்பொருட்களோடு கலந்து மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கேன்சர் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள தெரிவிக்கின்றனர். சில ஆண்டு முன்பு வரை சூடான உணவுப்பொருட்கள் வாங்க பாத்திரங்களை எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்ட நாம் அதை மீண்டும் செயல்படுத்த முயல வேண்டும்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை கருத்தில் கொண்டே உலகின் பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 20 க்கும் அதிகமான மாநிலங்களில் குறிப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாவிட்டாலும் தவிர்க்க முடியும். இன்ஷா அல்லாஹ் அதற்கான முயற்சியை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்த முயற்சிப்போம் !
-மு.இஸ்மாயில்