...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 29/06/2017 10:40:04

 Latest Articles

வன்முறையாளர்களை 'பாதுகாவலர்கள்' என்றல்ல; குண்டர்கள் என்றேகுறிப்பிடுவோம்!

| Category | Source Tamil Hindu | Author Mohamed Siraj V K | Email mohamedsiraj_vk@yahoo.co.in

சிந்தனைக் களம் » தலையங்கம்

Published: June 29, 2017 09:21 IST       Updated: June 29, 2017 09:21 IST

வன்முறையாளர்களை 'பாதுகாவலர்கள்' என்றல்ல; குண்டர்கள் என்றேகுறிப்பிடுவோம்!

நாடு முழுக்க ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம் மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நாளில் ஹரியாணாவின் ஒரு கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்கள் கொண்டாட்டத்திலிருந்து முழுமையாகத் தங்களை விலக்கிக்கொண்டனர். அவர்கள் அன்று கருப்பு உடை உடுத்தியிருந்தனர் அல்லது கருப்புப் பட்டை அணிந்திருந்தனர். பலருடைய வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஒருவகையில் துக்க அனுஷ்டிப்பு - ஒருவகையில் அது எதிர்ப்பு.

டெல்லி-மதுரா பயணிகள் ரயிலில் அதற்கு சில நாட்கள் முன்னர் நான்கு முஸ்லிம் சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் சிறுவன் ஜுனைத் உயிரிழந்தான். பட்டப்பகலில் ஓடும் ரயிலில் நடந்த தாக்குதல் இது. பண்டிகையைக் கொண்டாட, டெல்லி சென்று புதிய பைஜாமா, குர்தா, புதிய ஷூக்கள் வாங்கிக்கொண்டு ரயில் ஏறிய ஜுனைத்தின் சடலம்தான் அவனுடைய வீட்டுக்கு வந்தது. கூடவே வந்த அவனுடைய சகோதரர்களும் பலத்த காயம் அடைந்திருந்தார்கள். அவர்களின் பயணத்தில், இடையே ரோக்லா ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு கும்பல் இந்த முஸ்லிம் சகோதரர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி, ரயில் நிலையத்தில் ஜுனைதைத் தூக்கி வீசியிருக்கிறது. அப்பட்டமான மத வெறுப்பைக் காரணமாகக் கொண்ட இந்தக் கொலை தொடர்பாக நம்மை வந்தடையும் தகவல்களில் ஒன்று, கொலையாளிகள் தங்களுக்குள் சொல்லிக்கொண்ட நியாயம் - இந்த மூவரும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் என்பது.

யாருடைய உணவை யார் தீர்மானிப்பது? அரசாங்கமே கை வைக்க முடியாத ஒரு சக மனிதரின், சக குடிமகனின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் துணிச்சலை ஒரு கும்பல் எங்கிருந்து பெறுகிறது? நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?

பரிதாபாத் அருகிலுள்ள கந்தாவலி கிராமத்து முஸ்லிம் மக்கள் இந்தக் கேள்விகளைத்தான் இந்த நாட்டை ஆளும் அரசின் முன் வைத்தனர். இந்தியா திரும்பிய காந்தி சம்பாரணில் தன்னுடைய முதல் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய நூற்றாண்டில், டெல்லியிலிருந்து கொஞ்சமே தொலைவிலுள்ள பரிதாபாத், கந்தாவலி கிராமத்தில் நடந்த இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் எந்த வகையிலும் டெல்லி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

போர்ச்சுகல் காட்டுத்தீ விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடியின் கருணை, ஜுனைதுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நாடும் மக்களும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இப்படியான வன்முறைகளையும் இதற்குப் பின்னுள்ள வன்முறையாளர்களையும் மிகுந்த கோபத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் வழியே தங்கள் கருத்துகளை வெளியிட்டபடி இருக்கின்றனர்.

ரயில் நிலையத்தில் தனது சகோதரர் மடியில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ஜுனைதின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையும் குற்றவுணர்வில் தள்ளுகிறது. இந்த தருணத்தில் நம்முடைய வாசகர்களில் சிலர் தி இந்துவுக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு, பசுப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் வெறித் தாக்குதல் நடத்தும் வன்முறையாளர்களைபாதுகாவலர்கள் என்ற பெயரில் ஊடகங்கள் குறிப்பிடுவது என்ன நியாயம்?

மிக நுட்பமான கேள்வி இது. இந்துக்களைப் பொறுத்தவரையில் பசு ஒரு விலங்கு மட்டும் அல்ல; அதற்கும் மேலான ஓர் இடத்தை அவர்கள் நம்பிக்கையில் அது பெற்றிருக்கிறது. ஆனால், நம்முடைய தேசப் பிதா காந்தி கேட்டதுபோல, நம்முடைய நம்பிக்கைகளை நாம் பின்பற்றுவது சரி; அதற்காக அவற்றை ஏனையோர் மீது, குறிப்பாக ஏனைய மதத்தவர் மீது திணிப்பது எப்படி நியாயம் ஆகும்? என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது.

வன்முறை எந்த வடிவில், எந்த அமைப்பின் பெயரில், எந்தக் கொள்கையின் பெயரால் வந்தாலும் அது எதிர்க்கத் தக்கதே! கொள்கையின் பெயரால் துன்புறுத்தலிலும், உயிர்க் கொலையிலும் ஈடுபடுபவர்களுக்கு கவுரவமான அடையாளம் ஒருபோதும் கிடைத்துவிடக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், தங்களைத் தாங்களே பசுப் பாதுகாவலர்கள் என்று அறிவித்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் கும்பலை குண்டர்கள் என்று அடையாளம் காட்டுவதே நியாயம். தி இந்து தமிழ் நாளிதழைப் பொறுத்தவரையில், இனிவரும் காலங்களில் பசுப் பாதுகாப்பின் பெயரால் வன்முறையில் இறங்குபவர்கள் பசு குண்டர்கள் என்றே குறிப்பிடப்படுவார்கள். நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிராக வன்முறைக் கலாச்சாரத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிரான தி இந்துவின் ஒரு அடையாள நடவடிக்கையே இது!

இந்த விவகாரம் தொடர்பாக, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தங்களைத் தாங்களே பாதுகாவலர்கள் என்று அறிவித்துக்கொள்பவர்கள் உண்மையில் சமூக விரோதிகள்; குற்றவாளிகள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்பு ஒரு தருணத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது இங்கு மீண்டும் நினைவுகூரத்தக்கது. பிரதமரின் வார்த்தைகளிலும் வெளிப்பட்ட உறுதி அவருடைய அரசின் செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும்; கடைசி மனிதனின் சுதந்திரமான, அமைதியான வாழ்வுக்கும் பொறுப்புடையதாக அரசு செயல்பட வேண்டும்!