...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 26/03/2018 14:03:23

 Latest Articles

கடமைகள் முடிந்து போனபோது....

| Category | Source Not Available | Author Yousufa Mohamed | Email myousufa@gmail.com

இம்முறை(யும்) இந்தியா சென்றபோது, வெவ்வேறு ஊர்களில் 50+ வயதிலான பெண்கள் பலரைச் சந்திக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட எல்லாருமே ஒருவித மன அழுத்தம், விரக்தி, பயம், கோபம், ஆற்றாமை, அதிகாரம் போன்றவை கலந்த உணர்ச்சிக் குவியல்களாகவே இருந்தார்கள்!!


ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதை வெளிப்படுத்துகிறார்கள். தன்னிடமிருக்கும் பணத்தை/சொத்துக்களை அனைவரும் அபகரிக்கப் பார்க்கிறார்கள் என்று வருவோர் போவோரிடமெல்லாம் அரற்றும் ஒருவர்... கணவரை எங்கும் அசைய விடாமல், யாரிடமும் பேச விடாமல் ஆதிக்கமாக ஒருவர்... கைகால் செயலிழந்து படுக்கையில் விழுந்து விடுவோமோ என்ற பயத்துடன் சிலர்... எவ்வளவு பத்தியமாக இருந்தேன், அப்படி இருந்தும் நோய் வந்துவிட்டதே என்ற விரக்தியில் வழிபாடுகளைத் துறந்தவர் ஒருவர்.... ஏதோவொரு கவலையிலோ குற்ற உணர்விலோ தூக்கமே அற்றுப் போன ஒருவர்..... குடும்பங்களில் தம் அதிகாரம் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகன் முதல் பேரனின் திருமண வாழ்க்கையிலும் தலையிடும் சிலர் .... இப்படிப் பலப் பல விதமாக பெண்கள்.... அனைவருமே ஐம்பதைத் தாண்டியவர்கள்தாம்!!


வழக்கமாக இளம் வயது பெண்களுக்கு அறிவுரை மேல் அறிவுரை சொல்லி, கடமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் சமுதாயம், இளமையைக் கடந்த, குடும்பக் கடமைகளை முடித்த 50+ வயதிலுள்ள பெண்களை மறந்துவிடுகிறது. ஒன்று, “தாயின் காலடியில் சுவர்க்கம்” என்று சொல்லி அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது; அல்லது, அவர்களையே உதாசீனப்படுத்திவிடுகிறது. இறைவன் காப்பானாக! 


ஆழ்ந்து சிந்தித்தால், நான் சந்தித்த இப்பெண்கள் அனைவரிடமும் ஒரு சில ஒற்றுமைகள் உண்டு: ஓரிருவர் தவிர மற்றவர்கள் யாரும் தனியாக இல்லை; கூட்டுக் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். 


எல்லாருமே தவறாமல் தொழுது ஓதி வருகிறார்கள்.  என்றாலும், தவக்குல் முழுமையாக இல்லை - அல்லது, அதைக் குறித்து அறியவில்லை. (அல்லாஹ்வே அறிந்தவன்)


அடுத்து, சுறுசுறுப்பாக இருந்த காலங்களில், சமையலறை, குடும்பம் என்ற நோக்கத்தில் மட்டுமே தன் வட்டத்தைச் சுருக்கிச் செயலாற்றியவர்கள். அதைத் தாண்டி வேறு எதுவும் யோசிக்காதவர்கள். தமக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் (உடை, நகை தவிர்த்து) எதுவுமே இல்லாதவர்கள். ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது பயன் தருவதாகவோ புதிதாக எதையுமே கற்காதவர்கள், பழகாதவர்கள்.. அதாவது, குறைந்த பட்சம் புத்தக வாசிப்பு கூட இல்லாதவர்கள். முஸ்லிம் பெண்களிடையே இது இயல்பானதாகவே இருக்கின்றது.


ஆகையால், தனக்கென உள்ள கடமைகள் அனைத்தும் முடிந்த பிறகு, அதிகாரங்கள் இளையவர்கள் கைக்குப் போன பின்பு அல்லது வீடு Empty Nest - ஆன பிறகு, மிஞ்சும் நேரத்தை என்ன செய்யவெனத் தெரியாமல் குழம்பிப் போய் நிற்கையில்.... An idle mind is devil's workshop என்பதாக அத்தனைத் தேவையற்ற சிந்தனைகள், சந்தேகங்கள். பயங்கள், பதட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!! விளைவு, அமைதியாகக் கழிக்க வேண்டிய ஓய்வுக் காலம் நிம்மதியற்றுப் போகிறது - அவர்களுக்கும், அவர்களோடு உள்ளவர்களுக்கும்.

என்ன செய்திருக்க வேண்டும்? இனியேனும் என்ன செய்ய வேண்டும்?


Idle Mind-ஐ பிஸியாக ஆக்க வேண்டும். உடனே குர் ஆன், தொழுகை, பயான்கள் கேட்பது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றும். அதையெல்லாம் தவறாமல் தொடர்ந்து செய்து வருபவர்கள்தாம் இவர்கள்.


பொதுவாகவே, எப்படியும் எல்லாருக்கும் சின்ன வயதில் ஒரு passion இருந்திருக்கும். அதை நேரமின்மை காரணமாகத் தொடர முடியாமல் அல்லது கற்க முடியாமல் போயிருக்கும். அதை இப்போது தொடர்வது நல்ல பலன்கள் தரும். எது உங்களுக்குப் பிடித்தமானதோ அதில் மனதை - உந்தித் தள்ளிச் செலுத்துங்கள். என்ன செய்வது என்று எதுவும் தெரியாத, புரியாதவர்கள் குறைந்த பட்சம் வாக்கிங் போகத் தொடங்குங்கள். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல், வெளியே சென்று வருவதும் அவசியம்.

நான் சந்தித்த இன்னொரு பெண்மணியையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். 80 வயதைக் கடந்தவர் அவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.  அதிக இபாதத்துகளும் செய்பவர். சிறுவயதிலிருந்தே குறிப்பாக, “அனைத்தும் அவன் செயல்” என்பதில் உறுதியானவர். சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.


அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சுப்ஹானல்லாஹ்!! முகத்தில் அப்படி ஒரு தெளிவு, ஒளி!! வார்த்தைக்கு வார்த்தை அல்ஹம்துலில்லாஹ் என்பதும்... அவரது வயதுக்கு பக்கவாதத்திலிருந்து மீள்வது கடினமானது என்றாலும், அவரது தன்னம்பிக்கை, நன்றியுணர்வு காரணமோ... தற்போது ஓரளவு குணம் தெரிகிறது.  

உதாரணமாக, நான் திருச்சியில் சந்தித்த 76 வயதுப் பெண்ணான திருமதி. கமலா இராஜனுக்கு எழுத்து, ஓவியக்கலை அதற்கு துணை நிற்கிறது. ஃபேஸ்புக்கில் என் நட்பில் உள்ள திருமதி. மரியா என்ற பெண்மணி தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் இதைப் போன்ற வெறுமையை உணரத் துவங்கியதும் உடனே ஃப்ரெஞ்ச் மொழி கற்கும் வகுப்பில் சேர்ந்து வெறுமையை விரட்டி, மகிழ்ச்சியாக உள்ளார்.


இப்படி ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதை ஈடுபடுத்தினால்தான் முதிய வயதின் உள்ளம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே, உங்கள் வீடுகளில் உள்ள பெண்களை, விட்டுப் போனவற்றைத் தொடரவோ, புதிதாகக் கற்றுக் கொள்ளவோ ஆர்வமூட்டுங்கள். இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், இதை இப்போதே நினைவில் வைத்துச் செயல்படுங்கள்.


அல்லாஹ் எல்லாரையும் பாதுகாப்பானாக!!