...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 18/08/2017 09:12:04

 Latest Articles

யார் இந்த மிஷ்கின்?

| Category | Source Facebook | Author Abdul Jabbar Masthan | Email jabbar77a@gmail.com |  Attachment

யார் இந்த மிஷ்கின்?

இதுவரையிலும் விடாமுயற்சிக்கு மேற்கத்திய தாமஸ் ஆல்வா எடிசனைத்தான் நமது பிள்ளைகளுக்கு உதாரணமாகச் சொல்லிக்கொடுத்து வந்துகொண்டிருக்கிறோம். இனி இந்தியரான இவரது விடாமுயற்சியையும் சொல்லிக்கொடுக்கலாம். ஏன் நாமும் கூட இனி மிஷ்கின் என்று யாராவது சொன்னால் இவரைப் பற்றியே முதலில் சொல்லவும் பழகிக்கொள்ளலாம்.


நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த இளைஞர் பெயர்தான் மிஷ்கின் இங்கவாலே. இவர் கொல்கத்தாவைச் சார்ந்தவர். போபாலில் உள்ள மௌலானா ஆஸாத் தேசியத் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்று பிறகு கொல்கத்தாவின் ஐ ஐ எம் இல் முதுகலையும் ஆராய்ச்சியும் முடித்து முனைவர் ஆனார். பிறகு அவருக்கு அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவின் எம் ஐ டி இல் இவரது (குழுவின்) மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இ-பைக் இந்த ஆண்டு வெளிவந்தது. இதுதவிர விக்கிப்பீடியாவின் தகவல்களை தரம்பிரிக்கும் இவரது ஆய்வு இவருக்கு முனைவர் பட்டம் ஈட்டிக்கொடுத்தது.


திருப்புமுனை:

அந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த 2009 ஆம் ஆண்டு வாகில் விடுமுறைக்காக இந்தியா வருகிறார். மும்பையில் தங்கியிருந்த அவர் தனது (மருத்துவ) நண்பரை சந்திக்கவேண்டி அழைத்தபோது,  தாம் மும்பையிலிருந்து ஒருமணிநேரம் பயணிக்கவேண்டிய தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறேன் என்று சொல்ல, மிஷ்கின் அவரைச் சந்திக்கப் புறப்படுகிறார். 


நீண்டநேர காத்திருப்புக்குப் பின்னர் வரும் நண்பர் மிகுந்த சோகத்துடனும் வேதனை நிறைந்த முகத்துடனும் வருகிறார். "என்னாச்சு?" எனும்போது தான் பார்த்த பிரசவத்தில் தாயும் சேயும் இறந்துவிட்டனர். postpartum hemorrhage எனப்படும் பிரசவத்திற்கு பின்னால் அதிகமான உள்உதிரப்போக்கு ஏற்பட்டுவிட்டது. என்னால் காப்பாற்ற முடியவில்லை என்று கலங்கி நிற்கிறார். எப்படி இந்த விபரீதம் நடந்தது? பேறுகாலத்தில் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த 'அனீமியா' இரத்தசோகைதான் காரணம் என்கிறார் மருத்துவ நண்பர்.


இரத்தசோகை எளிதில் குணமாக்கக்கூடிய ஒரு வியாதிதானே? இதற்கு மருந்து மாத்திரைகள் எளிதில் கிடைக்கிறதுதானே? பிறகு எப்படி இது உயிரைப்பறிக்கும் ஒரு கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது? என்று தனது கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன எஞ்சினியர் நண்பருக்கு மருத்துவ நண்பர் சொன்ன பதில், "பெருநகரங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இருப்பதுபோன்ற வசதிகள் சிறிய கிராமப்புறங்களில் இல்லை. அதுபோன்ற பரிசோதனைக் கருவிகள் வாங்குவதற்கு இலட்சக்கணக்கில் தேவைப்படும். இன்னும் கிராமப்புறங்களில் இருக்கும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் செவிலியர்களாலே நிர்வகிக்கப்படுகிறது. என்று சொல்லிக்கொண்டே போன நண்பரை இடைமறித்து, "நாமெல்லாம் படித்திருக்கிறோம். இதற்காக ஏதேனும் செய்யவேண்டும்" என்கிறார் மிஷ்கின்.


எளிதில் மருந்து மாத்திரைகள் கிடைக்கக்கூடிய, குணப்படுத்திவிடக்கூடிய ஒரு குறைபாட்டை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை உடனடியாக நாம் தடுக்கவேண்டும். இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி  எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு சாதனமாக உருவாக்கவேண்டும். நம்நாட்டில் மட்டும் இந்தக் குறைபாட்டால் ஆயிரம் மகப்பேறு நடைபெறும் வேளையில் 221 பெண்கள் இறந்துபோகிறார்கள் என்பது பெரும்கொடுமை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கில் உருவானது மிஷ்கின் தலைமையில் ஐவர் குழு.


அவர்களின் முதல் கண்டுபிடிப்பான, ஊசி மூலம் பரிசோதனைக்கு இரத்தம் எடுக்காமல் சென்சார் மூலம் இயங்கி இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இரத்த செல்களின் எண்னிக்கையை துல்லியமாகத் தரும் ToucHB  என்ற சாதனம் முப்பத்திரண்டு முறை தோல்வி கண்டு முப்பத்தி மூன்றாம் முறை வெற்றியோடு செயல்பட்டது. 


அதற்குப் பிறகு இந்தக்குழு கண்டுபிடித்த UChek என்ற சிறுநீர் பரிசோதனைக்கருவி. இது  Glucose, Bilirubin, Ketone, Specific Gravity, Blood, pH, Protein, Urobilinogen, Nitrite and Leukocytes மற்றும் ABR போன்றவைகளை மொபைல் அப்ளிகேஷன் மூலம் கண்டறிய உதவும் ஒரு மென்பொருளை உருவாக்கினர்.


அடுத்ததாக அவர்கள் தயாரித்திருத்திருப்பது SUchek என்ற ஸ்மார்ட்போனில் இயங்கும் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் கருவி.


இந்தியாவில் மட்டுமல்ல  ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மற்றும் தென்அமெரிக்க நாடுகளிலும் உள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழே குக்கிராமங்களில் வாழும் மூன்று பில்லியன் ஏழை எளியோரின் உயிரைக் காப்பதே எங்கள் இலட்சியம் என்றும் வரும் 2020 ஆண்டில் இரத்தசோகையினால் இறப்போர் இல்லை என்று ஆக்குவோம் என்று முழங்கும் மிஷ்கின் நினைவில் வைத்துப் பாராட்டப்படவேண்டியவர்தானே??!!