”வாசித்தல்” என்றதும், நமக்கு அன்றாடம் செய்தித்தாள் வாசித்தல்தான் நினைவுக்கு வரும். இப்போது தொலைக்காட்சிகளில் மணிக்கொருமுறை செய்திகள் ஒளிபரப்படுவதால், அதைக் கூட வாசிக்கத் தேவையற்றுப் போகிறது.
பொதுவாகவே மக்களிடையே வாசிப்பு குறைந்துவிட்டது; அதிலும் முஸ்லிம்களிடையே அப்பழக்கமே அருகிவிட்டது என்று சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது. அதன் விளைவு சமூகத்தின் செயற்பாடுகளில் தெளிவாகச் தெரிகிறது.
”தன் வரலாற்றை அறியாத சமூகம் முன்னேறவே முடியாது” என்பதாக, முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றை உலக அளவிலும், ஏன் இந்திய அளவிலும்கூட அறிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளனர். தம் சொந்த ஊரின் ஸ்தல வரலாறு கேட்டால்கூட, அதையும் முன்னோர்களிடமிருந்து பதிவு செய்யத் தவறியவர்களாகவே உள்ளோம்.
உலக அளவில் முஸ்லிம்கள் ஆண்ட நாடுகள் எவை, இஸ்லாம் எங்கெங்கு பரவியிருந்தது, இப்போது எங்கெல்லாம் மிச்சம் மீதி இருக்கிறது, மற்ற இடங்களில் ஏன் மறைந்து விட்டது என்று தெரியுமா? மஸ்ஜிதுல் அக்ஸா ஏன் முஸ்லிம்கள் கைவிட்டுப் போனது என அறி்வோமா? சலாஹுத்தீன் அய்யூபி தெரியுமா?
முஸ்லிம்கள் அறிவியலுக்கு என்ன செய்துள்ளனர்? உலகின் தொழில்நுட்பங்கள் எதிலாவது முஸ்லிம்களின் பங்கு இருக்கிறதா என யாரும் கேட்டால் பதில் சொல்ல அறிவோமா? கேமராவை கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம்; முதன்முதலில் விமானம் செய்ததும் ஒரு முஸ்லிம்; ஏன், அமெரிக்காவை கொலம்பஸுக்கு முன்பே கண்டுபிடித்ததும் ஒரு முஸ்லிம் என்பது ஒரு அதிசயத் தகவலாகத்தான் இருக்கும் நமக்கு. ஏனெனில் வாசிப்பு என்பதே நம்மிடம் இல்லையே..
உலக அளவில் வேண்டாம், இந்திய சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களுக்குப் பங்கே இல்லை என்பதாகத்தானே நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். 800 ஆண்டுகாலம் ஆண்ட முகலாய மன்னர்களும் விரோதிகளாகத்தானே சித்தரிக்கப்படுகிறார்கள்.... ஆனால், இந்தியா என்ற நாடே முகலாயர்களாலதான் கட்டமைக்கப்பட்டது என்பதையோ, இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒரு முஸ்லிம் என்பதையோ நாம் அறியமாட்டோம். ஏனெனில் வாசிப்பு நமக்கு வெறுப்பு!!
அட, நம்ம ஊர் வரலாறாவது நமக்குத் தெரியுமா... நமக்குத் தெரிந்திருந்தால்தானே அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?
வாசிப்பு என்றதும், சிலர் மார்க்கம் சம்பந்தப்பட்ட ஹதீஸ், சீறா, இஸ்லாமிய இதழ்கள் போன்றவற்றை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அத்தோடு தன் வாசிப்பு எல்லையைச் சுருக்கிக் கொள்வதன் மூலம், இஸ்லாத்தின் சிறப்புகளை முழுமையாக அறிந்துகொள்ளாமல் போகிறோம், ஆம்!!
சமீபத்தில், க்வாண்டனாமோ சிறையில் காவலராக இருந்து பின்னர் முஸ்லிமாக மாறியவர், தான் எப்படி முஸ்லிம் ஆனேன் என்று விவரித்து எழுதியிருந்த புத்தக்த்தை வாசித்தேன். அதில் அவர் ஏற்கனவே பைபிள், தௌரா, மற்றும் இன்னும் சில மதங்களின் புனித நூல்களை வாசித்திருந்ததாகவும், அதன்பின்னர் குர் ஆனை வாசிக்க வாய்ப்பு கிடைத்த போது, இஸ்லாமை மற்ற மதங்களோடு ஒப்பிட்டு நோக்க முடிந்தது என்றும், அத்னால்தான் இஸ்லாமின் சிறப்புகளை உடனே உள்வாங்க முடிந்தது என்றும் விவரித்திருந்தார். உண்மைதானே?
வீட்டில் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளியுங்கள். அவர்களோடு நீங்களும் அதை வாசித்துக் கலந்துரையாடுங்கள். அதைக் கதையாக, நண்பர்களுக்குச் சொல்லச் சொல்லுங்கள்.
பரிசாகக் கொடுக்கப் படவேண்டியவை புத்தாடைகளும், பைக்குகளும் அல்ல - புத்தகங்கள்தாம்!! பரிசளிப்பு விழாக்களில், அலமாரிகளில் வெறுமனே அலங்காரப் பொருளாக அடையப்போகும் கோப்பைகளையும், ஷீல்டுகளையும்விட புத்தகங்களைப் பரிசளித்தால், அவை அவர்களை வாழ்வின் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாய் இருக்கும். அவர்களை மட்டுமல்ல, ஏணி யார் வந்தாலும் ஏற்றிவிடும்!!
பெண்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தையின் முதல் ஆசிரியர்களான தாய்க்கும், உரிய தெளிவு இருந்தால்தானே, பிள்ளைகளுக்கும் நம் வீர வரலாறுகளை அறியத் தரமுடியும்?
வரலாற்றை வெளிப்படையாகவே மாற்றி எழுதுகின்ற தற்போதைய காலகட்டத்தில், விஞ்ஞானியான அப்துல் கலாமை இனி வீணை வித்வானாகத்தான் அடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்வார்கள்!! இதைப் பார்த்தும் இன்னும் வாசிப்பை நேசிக்காமல் இருந்தால்......
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!!
வீதிக்கொரு நூலகம் செய்வோம்!!