...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
புத்தகம்: உயிரைக் குடிக்கும் புட்டி நீர்
எழுதியவர்: நக்கீரன்
இன்றைய
உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் “பாட்டில் குடிநீர்” குறித்துப்
பேசும் புத்தகம் இது. அதன் உற்பத்தியாளர்கள் சொல்வதுபோல, பாட்டில் நீர்
சுத்தமானதும் இல்லை, தரமானதுமல்ல, சுவையானதுமல்ல, தூய்மையானதுமில்லை,
சத்து நிறைந்ததுமில்லை, பாதுகாப்பானதுமில்லை. ஆனால் கிருமிகள்,
பூச்சிக்கொல்லிகள், நோய்கள் நிறைந்தது என்று ஆதாரங்களோடு பட்டியலிடுகிறார்.
ஏன் பெட்ரோல்கூட இருக்கிறதாம்!!
இதில் காட்டப்படும் பெரும்பாலான
ஆய்வக ஆதாரங்கள் வெளிநாடுகளில் உள்ளது. அங்கு சற்றேனும் தரக்கட்டுபாடுகள்,
சட்டங்கள் கடைபிடிக்கப்படும் அங்கேயே இந்நிலை என்றால்.... இந்தியாவில்?
எதை நம்பி குடிக்கிறோம் இவற்றை?
இன்று வீடுகள்தோறும் ஆர்.ஓ.
எனப்படும் எதிர் சவ்வூடு பரவல் கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீர்
சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதை மிகவும் பாதுகாப்பானதாக
நம்புகிறோம். ஆனால், அதில் தண்ணீரில் இயற்கையாக உள்ள தாதுக்கள்
நீக்கப்பட்டு வெறும் சக்கையைத்தான் குடிக்கிறோம். கால்சியம், மெக்னீஷியம்
உள்ளிட்ட தாதுக்கள் குறைபாட்டால், இதைத் தொடர்ந்து குடித்துவரும்
மக்களுக்கு எலும்பு முறிவு, அடர்த்திக் குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
மேலும், தாதுக்குறைபாடு இதய நோய் உள்ளிட்ட பலவற்றிற்கும் வழிவகுக்கும்
என்று ஆசிரியர் சொல்கிறார்.
எனில், எதைத்தான் குடிப்பது என்று
கேள்வி எழும். அரசு, நகராட்சி குடிநீர் குழாய்கள் வழி வழங்கும்
குடிநீரைத்தான் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர்!!! அதை
நம் மனம் ஏற்க மறுக்கிறதல்லவா? ஆனால், அதில்தான் தேவையான தாதுக்கள்
உள்ளதோடு, முறையான கிருமி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது என்று காரணத்தைத்
தெளிவுபடுத்துகிறார்.
நகராட்சி தரும் குடிநீர் சுத்தமானதும் சத்தானதும்தான்.
ஒத்துக்கொள்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வரும் குழாய்கள்?
துருப்பிடித்துப்போன குழாய்களும், குழாய் உடைந்து கழிவு நீர் கலந்து வரும்
குடிநீரும்... நினைக்கவே அருவெறுப்பாக உள்ளதல்லவா... அதைச் சரி செய்வது
அரசின் பொறுப்பு; மாநிலம் முழுதும் பாட்டில் நிறுவனங்களைச் செயல்பட
அனுமதித்துள்ள அரசு, முதலில் சரி செய்யவேண்டியது இதைத்தான் என்று
சாடுகிறார். அதுதான் நமக்கும் தெரியுமே.... நடந்தால்தானே...
நகராட்சி
குடிநீரையே தான் இத்தனை வருடங்களாகக் குடித்து வருவதாகவும், தனக்கு இதுவரை
எதுவும் ஆகவில்லை என்று தைரியமளிக்கும் ஆசிரியர், குழாயில் வரும் குடிநீரை
சூரிய ஒளி கொண்டு கிருமி நீக்கம் செய்யும் முறையையும், தேத்தாங்கொட்டை,
முருங்கை விதை போன்றவற்றைப் பயன்படுத்திச் சுத்தம் செய்வதையும் சொல்லித்
தருகிறார்.
குடிநீர்ப் பஞ்சம் நிலவும் மாநிலங்களில்கூட அதிக
பாட்டில் நீர் நிறுவனங்கள் இல்லை; தண்ணீர் வளம் நிரம்பிய தமிழ்நாட்டில்தான்
இந்தியா முழுதும் உள்ள 1200 பாட்டில் குடிநீர் நிறுவனங்களில் பாதி - 600
அமைந்துள்ளன என்று அதிர்ச்சி அளிக்கிறார் ஆசிரியர். மக்களுக்கு சுத்தமான
நீரை வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அதே நீரை வணிக
நிறுவங்களிடம் இந்த அரசு ஒப்படைத்துள்ளது என்பது எத்தனை கேவலம்?
இத்தனைக்கும்,
2007-ல் உலக மேம்பாட்டு இயக்கம் வெளியிட்ட Going Public: Southern
Solutions to the Global Water Crisis என்ற அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பொதுத்துறை நீர் விநியோக அமைப்புகளில்
தமிழகத்தின் பொதுத்துறையும் ஒன்று. இத்தகைய பெருமையுடைய அரசு நிறுவனம்,
இன்று நீராதாராஅங்களைத் தனியாருக்குத் திறந்துவிட்டு செயலிழந்து
நிற்கிறது!! குழாயில் நீர் வழங்குவதைக் காட்டிலும் “பாட்டில் நீர்” வழங்க
1000 மடங்கு அதிகம் செலவாகிறதாம்!! அந்த அதிகப்படி செலவு யார் தலையில்
விடியும்? இதனால் சேரும் ப்ளாஸ்டிக் கழிவுகள் வேறு!!
பாட்டில்
நீரைக் குடிக்கும் மக்களிடையே ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் பற்றி இவர்
கூறும் உண்மை பகீரென்கிறது. வேதனையுடன் “கரெக்டுதான்” என்று சொல்ல
வைக்கிறது. தண்ணீர்ப் பந்தல் வைத்து, அறியாத தெரியாத மக்களின் தாகம்
தீர்த்த மக்கள் இன்று காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டிருப்பதன்மூலம், பொதுநலம் மறந்து சுயநலம் பெருகியவர்களாக
ஆகிவருகின்றனர். காசு கொடுத்து வாங்குவதால் தண்ணீரை மற்றவர்களுடன் பகிர
மனம் வருவதில்லை.
அனைவரும் நீர் அரசியலைப் புரிந்துகொள்ள,
கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். ஆனால், முழுதும் “சுத்தத் தமிழில்”
எழுதப்பட்டுள்ளதால், சாமான்ய மக்களைச் சென்று சேருவதில் சிரமம் இருக்கும்.
தலைப்பே “புட்டி நீர்” என்றிருப்பதைவிட, “பாட்டில் நீர்” என்றோ அல்லது
“குப்பி நீர்” என்றோ இருந்திருந்தால் அதிகம் பேரைச்
சென்றடைந்திருக்கலாமோ....
https://www.facebook.com/Chennaites/
இந்தியாவின் Think Tank நிறுவனமான ”Indian Council for Research on International Economic Relations”,
இந்திய அரசு, குடிநீரை இலவசமாகக் கொடுக்கக் கூடாது; இஸ்ரேலைப் போல ஒவ்வொரு
சொட்டு நீருக்கும் கட்டணம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது!!
பிரதமரின் சமீபத்திய இஸ்ரேலிய விஜயத்திற்குமுன் கூறப்பட்டுள்ள இந்த ஆலோசனை செயல்படுத்தப்பட்டு, குடிநீரும் கார்ப்போரேட்டுகள் வசம் போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆசிரியர்
மழைநீரைப் பற்றிப் பேசவேயில்லை. மழைநீர் சேகரிப்பு மிக அவசர, அவசியத்
தேவையாக மாறி வருகிறது. சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தம்
வீட்டுக்கு மழைநீரை மட்டுமே சேமித்துப் பயன்படுத்தி
வருவதாக் கூறினார். ஒரு முறை பிடிக்கும் நீர் 6 மாதங்களுக்கு வருவதாகவும்,
அது தீரும் சமயத்தில், அடுத்த மழைக்காலம் ஆரம்பித்து விடுவதால்,
தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை என்று கூறினார். இனி ஒவ்வொருவரும் மழைநீரைச்
சேமிப்பதைத் தீவிரமாகச் செயல்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வாக அமையும்.
வீடுகளில்
மட்டுமல்ல, மக்கள் ஒன்றிணைந்து தத்தம் தெருக்களிலும், பகுதிகளிலும்
மழைநீர்த் தொட்டி அமைத்தாலொழிய பயமுறுத்திக் கொண்டிருக்கும் தண்ணீர்ப்
பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியாது!!