...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 21/07/2017 22:51:56

 Latest Articles

நமது தெருக்களின் எதிர்காலம்?!

| Category | Source Compiled by: Muhammad Ali Jawhar | Author Mohamed Ali Jawahar | Email Mbjawa@yahoo.com

 நமது தெருக்களின் எதிர்காலம்?!

 

நமதூருக்கு என்னை சந்திக்க வந்த ஓர் வெளியூர் நண்பர் நமது தெருக்களின் அகலத்தை கண்டு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்து NH-ஐ மிஞ்சிடும் போல இருக்கே!” என்று வியந்து கூறினார்.

 

தினசரி நாம் பயன்படுத்தும் இத்தெருக்களை பார்த்து நாம் என்றாவது வியந்ததுண்டா? இதைத்தான் முன்னோர், ஓர் பொருளின் அருமை இழந்த பின்னரே தெரியும் என்றனரோ?

 

பழைய, பிரதான மேலப்பாளையத்தின் பெரும்பாலான தெருக்கள் விசாலமாகவும், கிழ-மேல் அல்லது தென்-வடல் என நேர்கோட்டிலும் அமைந்துள்ளன. திட்டமிடப்பட்ட ஓர் நகரின் முக்கிய அடையாளம் இதுவே! இதை நமக்கு வழங்கிய முன்னோர்களை என்றாவது நாம் எண்ணிப்பார்த்து பாராட்டி இருப்போமா?

 

பாராட்டாமல் இருப்பினும், அவர்கள் அமைத்துத் தந்த தெருக்களை பாழாக்காமல் பராமரித்து, பாதுகாத்து நமது வருங்கால சந்ததியினருக்கு வழங்குவோமா என்ற பெரும் கேள்வி நம்முன் நிற்கின்றது.

 

தெரிந்தோ, தெரியாமலோ, உணர்ந்தோ, உணராமலோ நமது இரண்டாம் வீடான தெருக்களை பல வகையில்  பாழடித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

ஆக்கிரமிப்பு, குப்பையை கொட்டுவது, குழந்தைகளை இயற்கை தேவைகளை பூர்த்தி செய்ய தெருக்களுக்கு அனுப்பி பழக்குவது, தேவையற்ற பழைய பொருட்களை தெருவின் மத்தியில் சேர்த்து வைப்பது –  இவை நாம் பழகிப்போன செயல்களில் சில.....

 

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களும் அதே பாதையில் பயணித்தால் நமது தெருக்களில் வாகனங்களை நிறுத்த சண்டை-சச்சரவு-மனஸ்தாபம் வெகு தொலைவில் இல்லை!

 

இந்நிலையில் பிரச்சனையின் வீரியத்தை உணராமல், சூழலை மேன்மேலும் கை நழுவி செல்ல விட்டு விடாமல், நமதூர்வாசிகள் அனைவரும் இதற்கான தீர்வுகளை ஆராய்ந்து நடைமுறை படுத்த முன் வரவேண்டும்.

 

நமது தெருக்களை மேம்படுத்த நான் முன் வைக்கும் சில தீர்வுகள்:

1. அனைத்து மக்தப், மத்ரஸாக்களிலும் குழந்தைகளுக்கு சுத்தத்தின் அவசியத்தையும், நம் தெருக்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் பயான்களின் வாயிலாக உணர்த்த வேண்டும்.

2. குப்பையை தெருவில் வீசாமல், குப்பை தொட்டியிலோ அல்லது துப்புரவு பணியாளர்களிடமோ சேர்க்க வேண்டும்.

3. சிறு குழந்தைகள் இயற்கை தேவையை பூர்த்தி செய்ய கழிவறையை பயன்படுத்த பழக்க வேண்டும். நாம் ஏற்கனவே பழக்கியுள்ள தெருவை பயன்படுத்துவதிலிருந்து மாற்ற வேண்டும்.

4. தேவையற்ற பழைய பொருட்களை தெருக்களின் மத்தியில் சேர்த்து வைக்காமல் அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

5. புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள தெருக்களை இயன்றளவு சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

6. புதிதாக வீடு கட்டுவோர் தமது வாகனங்களை விடுவதற்கு இடம் ஒதுக்கி வீடு கட்ட வேண்டும். தமக்குரிய இடத்தின் எல்லைக்குள் கட்டுவதிலும் அதிக கவனம் வேண்டும்.

7. வீட்டை புதுப்பித்து கட்டுவோர், தமது இடத்தின் எல்லையை கருத்தில் கொண்டு கட்ட வேண்டும். பழைய அளவிலோ, அக்கம் பக்கம் இருக்கும் வீட்டின் அளவிலோ கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

8. தெருக்களிலுள்ள குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது வழிந்தோடும் நீரை அருகிலுள்ள மரங்களுக்கு முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும்.


உங்கள் சகோதரன், 

முஹம்மத் அலி ஜவ்ஹர்

தொடர்புக்கு: mbjawahar@gmail.com

 

இப்பதிவு பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க இங்கு சொடுக்கவும் https://www.melapalayam.co.in/m/mpmprof/contactUs.go